×

மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பரபரப்பு கணவர் திருநங்கையாக மாறியதால் விரக்தி

வேலூர், மார்ச் 4: கணவர் திருநங்கையாக மாறியதால் விரக்தியடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி 3 குழந்தைகளுடன் தாய் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மேல்மொணவூரை சேர்ந்தவர் குமரன்(42), இவரது மனைவி ெஜயந்தி. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ஜெயந்தி வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தனது குழந்தைகளுடன் வந்தார்.

பின்னர் தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும் 3 குழந்தைகள் மீதும் ஊற்றினார். இதைக்கண்ட போலீசார், ஜெயந்தியிடம் இருந்த கேனை பறித்து தடுத்து நிறுத்தி குழந்தைகள் உட்பட 4 பேர் மீதும் தண்ணீர் ஊற்றினர். பின்னர் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தி வைத்திருந்த போலீஸ் வேனில் குழந்தைகளுடன் ஜெயந்தியை அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் கதறி அழுதபடி ஜெயந்தி கூறியதாவது:

எனது கணவர் குமரன். எனக்கு ஸ்வேதா, நிஷா என்ற 2 மகள்களும், ஜீவித் என்ற ஒரு மகனும் உள்ளனர். எனது கணவர் கடந்த 3 ஆண்டுகளாக சேலை கட்டிக்கொண்டு திருநங்கையாக மாறி குறி சொல்லி வருகிறார். இதனால் எனக்கு அவமானமாக உள்ளது. எனவே, குறி சொல்வதை கைவிடுமாறு பலமுறை கூறினேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனவேதனையில் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்’ என்றார்.

இதையடுத்து போலீசார் ஜெயந்திக்கு அறிவுரை கூறி அவரது 3 குழந்தைகளையும் அழைத்துச்சென்று மேல்மொணவூரில் உள்ள ஜெயந்தியின் வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். கணவர் திருநங்கையாக மாறியதால், விரக்தியடைந்த பெண் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : children ,Office ,Vellore Collector ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...